தவறான சிகிச்சையால் அரசு பஸ் டிரைவர் கால் அகற்றம்


தவறான சிகிச்சையால் அரசு பஸ் டிரைவர் கால் அகற்றம்
x

தவறான சிகிச்சையால் அரசு பஸ் டிரைவர் கால் அகற்றம்

தஞ்சாவூர்

தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் தனது கால் அகற்றப்பட்டதாகவும், ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு பஸ் டிரைவர் சக்கரநாற்காலியில் வந்து கலெக்டரிடம் புகார் அளித்தார்.

அரசு பஸ் டிரைவர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜோதி(வயது 43). அரசு பஸ் டிரைவர். இவர் ஒரு காலை இழந்த நிலையில் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு சக்கரநாற்காலியில் வந்தார்.

பின்னர் அவர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கார் மோதியது

நான் தஞ்சை அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன்.

கடந்த மாதம் 4-ந் தேதி ஆயுதபூஜை அன்று பஸ்சுக்கு பூஜை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது அந்த வழியாக வந்த கார் மோதியது.

அறுவை சிகிச்சை

இதில் காலில் அடிபட்ட நான், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கு எனக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்தபின்னரும் காலில் வலி இருந்தது. இது குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து காலில் இருபுறமும் சதையை கிழித்து கட்டு போட்டனர். பின்னர் அதனை பிரித்தபோது சதைப்பகுதி கெட்டுபோய் விட்டது. ஆனால் ரத்த ஓட்டம் நன்றாக உள்ளது என கூறியதுடன் கால் செயல்திறன் குறைவு என டாக்டர் கூறியதால் அதிர்ச்சி அடைந்தோம்.

கால் அகற்றப்பட்டது

பின்னர் நாங்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தபோது கால் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை சரிசெய்ய முடியாது எனக்கூறி காலை அகற்ற வேண்டும் என கூறினர். இதையடுத்து வலது கால் அகற்றப்பட்டது.

ஆஸ்பத்திரியில் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் தான் எனது வலது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் யாருக்கும் இது போன்ற நிகழ்வு நடக்காமல் இருக்கவும், உரிய விசாரணை செய்து எனக்கு தக்க இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story