இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28). சுமைதூக்கும் தொழிலாளி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூரை சேர்ந்தவர் சூரியநாராயணன் (21). இவர்கள் 2 பேரும், கடந்த 17.1.2015-ந்தேதி வேலாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் காக்காதோப்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வேடசந்தூர் அருகே தேவகவுண்டன்பட்டி பிரிவில் மோட்டார்சைக்கிள் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே தனக்கு இழப்பீடு கேட்டு தமிழ்செல்வன் தரப்பில் வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. இதுதொடர்பாக வேடசந்தூர் சப்-கோர்ட்டில் தமிழ்செல்வன் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், அரசு பஸ்சை ஜப்தி செய்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்தநிலையில் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.