அரசு கேபிள் டி.வி. பணி முன்னேற்றம் குறித்து மேலாண்மை இயக்குனர் ஆய்வு
அரசு கேபிள் டி.வி. பணி முன்னேற்றம் குறித்து மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் பாரத்நெட் பேஸ் 2 செயல் திட்டத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி பணி முன்னேற்றம் குறித்து மேலாண்மை இயக்குனர் (டேக் டிவி) ஜான்லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார்.
தோகைமலை ஊராட்சி ஒன்றியம், தளிஞ்சி ஊராட்சியில் 48எப் கண்ணாடி இழை கேபிள் அமைத்தல், பாதிரிபட்டியில் கிராம சேவை மைய கட்டிடத்தில் இணைய வசதி வழங்கப்பட்ட விவரம், இணைய வசதிக்கு ஸ்பைசிங் ஒர்க் செய்தல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு இணைய வசதி வழங்கும் அக்ரிகேட்டிங் சர்வர் பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரப்பெற்ற விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கரூர் ஊராட்சி ஒன்றிய மையத்தில் இருந்து அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மூலம் 3 கி.மீ தூரத்திற்குள் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி வழங்குவதற்கு சோதனை அடிப்படையில் வாங்கப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இணைய வசதி வழங்கியது குறித்தும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் தரைத்தள கேபிள் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
டி.என்.எஸ்.டபிள்யூ.என். இணையவசதி செயல்பாடுகள் மற்றும் தற்போது வழங்கி வரும் வேகம் குறித்து கேட்டறிந்து எல்காட் நிறுவன பொறுப்பாளர்களுக்கு இணைய வசதியை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இத்திட்டம் பொதுமக்களுக்கு வருங்காலத்தில் மிக முக்கியமான திட்டமாகும் என்பதால் இத்திட்டம் அனைத்து கிராம பகுதிகளுக்கும் சென்றடைய அனைவரும் இணைந்து செயல்பட அறிவுறுத்தினார்.
தனிநபர்களால் கேபிள் துண்டிப்பு செய்து இணைய வசதிக்கு ஏதேனும் தடை ஏற்படுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்ற விவரத்தினை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என மேலாண்மை இயக்குனர் (டேக் டிவி) ஜான்லூயிஸ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் டேன்பி நெட் மற்றும் டேக் டிவி திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட வேண்டுவது குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.