10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத்தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும். அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் வகையில் வெளியான 3 அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல் அரசு துறைகளில் காலியாக இருக்கும் 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் நேற்று ஏராளமானோர் பணிக்கு வராமல், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மாவட்ட தலைவர் முபாரக்அலி கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் வந்ததால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் விவேகானந்தன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேல் உள்பட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர்.