அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் -போலீசார் விசாரணை


அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் -போலீசார் விசாரணை
x

சென்னை பிராட்வே அரசு பெண்கள் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் பாரதி மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. வடசென்னையில் உள்ள ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் பெரும்பாலானோர் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் பொன்னேரி, செங்குன்றம் மற்றும் திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு தற்போது புதிய கட்டிடங்கள் கட்டப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சான்றிதழ்கள் மாயம்

இதற்கிடையே இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் 58 பேருடைய 10-வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் கல்லூரியில் இருந்து மாயமாகி விட்டதாக கல்லூரி பேராசிரியர் ஹேமா முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது புதிய கட்டிட கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சான்றிதழ்களை அலுவலகத்தில் உள்ள அறை பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பீரோ உடைக்கப்படாமல் உள்ளதால், சான்றிதழ்கள் திருட்டு போனதா? அல்லது இடம் மாற்றம் செய்யும்போது காணாமல் போனதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் அதிர்ச்சி

கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமான சம்பவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டும் தான் மாயமாகி விட்டதா? அல்லது மேலும் பல மாணவிகளின் சான்றிதழ்கள் மாயமாகி போனதா? என்பது குறித்து மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மாணவிகளின் சேர்க்கை தற்போது கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் இச்சம்பவம் மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story