அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா


அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
x

வாணியம்பாடி அருகே ஆசிரியர் வேறு பள்ளிக்கு சென்றதால் மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த ஆசிரியர் அதே பள்ளிக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஆசிரியர் வேறு பள்ளிக்கு சென்றதால் மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த ஆசிரியர் அதே பள்ளிக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.

வேறு பள்ளிக்கு மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 677 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலவன் பணியாற்றி வந்தார். அவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் இயற்பியல் ஆசிரியர் வேலவன் தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வராததால் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையில் இயற்பியல் ஆசிரியர் திருப்பத்தூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கருதி இயற்பியல் ஆசிரியர் வேலவனை மீண்டும் தும்பேரி பள்ளியில் பணி அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தர்ணா போராட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் அம்பலூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு கொடுத்த தகவலின் பேரில் இயற்பியல் ஆசிரியர் வேலவன் தும்பேரி பள்ளிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் வந்ததும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குள் சென்றனர்.


Next Story