2 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் அரசு விடுதி


2 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் அரசு விடுதி
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மாணவர்கள் இல்லாததால் 2 ஆண்டு களாக அரசு விடுதி மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் மாணவர்கள் இல்லாததால் 2 ஆண்டு களாக அரசு விடுதி மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மாணவர் விடுதி

கூடலூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் பின்புறம் பிற்படுத்தப்பட்ட மாணவர் அரசு விடுதி உள்ளது. இங்கு கூடலூர் மட்டுமின்றி ஓவேலி, தேவர்சோலை, தேவாலா, நாடுகாணி, மசினகுடி மற்றும் பந்தலூர், சேரம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இருப்பினும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டது. விடுதிகளில் தங்கி இருந்த மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்றனர். தொற்று குறைந்த பின்னர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மூடி கிடக்கிறது

இதனால் கிராமப்புற மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், கூடலூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் இன்றி மூடி கிடக்கிறது. தொடர்ந்து கட்டிடமும் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் விடுதியை சுற்றி புதர்கள் படர்ந்து வருகிறது. இதனால் விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால் பிற்படுத்தப்பட்டோர் உடனடியாக மாணவர் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவிகள் விடுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரசு விடுதி மாணவர் சேர்க்கை முன்னாள் உறுப்பினர் ராமமூர்த்தி கூறியதாவது:-

பராமரிப்பு செலவு வீண்

2004-ம் ஆண்டு விடுதி கட்டப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து 30 பேர் மட்டும் தங்கி படித்து வந்தனர். பின்னர் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் விடுதி மூடப்பட்டது. ஆனால் மாணவர் சேர்க்கை தொடங்காததால் விடுதி மூடியே கிடக்கிறது. மேலும் வார்டன் பணியிடமும் காலியாக உள்ளது. கட்டிட மிக மோசமாக இருப்பதாக புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.14 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விடுதி திறக்கப்படாமல் உள்ளதால் அந்த நிதி வீணாகும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story