மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை? -அமைச்சர் மூர்த்தி பதில்
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
பாராட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு அமைச்சர் மூர்த்தி நேற்று பரிசுகள் வழங்கினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, கால்நடைதுறை, வருவாய் துறை, நகராட்சி, ஊரக வளர்ச்சி துறை ஆகியவை இணைந்து முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. பொன்னி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உள்பட அதிகாரிகள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு வேலை
அதன்பின் நிருபர்கள், போட்டியில் வெற்றி பெற்ற தகுதியான மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை இருக்கிறது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்று கேட்டனர். அதற்கு அமைச்சர் மூர்த்தி, இந்த கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உடனே நிருபர்கள், ஒவ்வொரு முறையும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றே பதில் வருகிறது. அவர்களுக்கு எப்போதுதான் விடியல் கிடைக்கும் என்று கேட்டனர். அதற்கு அமைச்சர் மூர்த்தி, இந்த ஆட்சியில் எல்லோருக்கும் விடிவு கிடைக்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக மிக பெரிய மைதானம் அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று பதிலளித்தார்.