போட்டித்தேர்வுகளுக்கு ைக ெகாடுக்குமா அரசு நூலகங்கள்


போட்டித்தேர்வுகளுக்கு அரசு நூலகங்கள் ைக ெகாடுக்குமா என இளைஞா்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்து விடுவார்கள்.

இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன. கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம்.

புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.

அச்சம்

நூலகங்களில் போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

மாவட்ட மைய நூலகம்

விருதுநகர் அகமது நகரில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடத்தில் மாவட்ட நூலக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்ட போதிலும் மைய நூலகத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும், புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கும் இட நெருக்கடி உள்ளது.

நகராட்சி நிர்வாகம் கூடுதல் இடத்தை ஒதுக்கி தந்தால் மைய நூலகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.

அலுவலர் பற்றாக்குறை

மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் முறையாக செயல்பட 186 நூலகர்கள் தேவைப்படும் நிலையில் 123 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் சில நூலகங்கள் கூடுதல் பொறுப்பில் செயல்பட்டு வருவதால் அனைத்து நூலகங்களும் வேலை நாட்களில் முறையாக செயல்பட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

மேலும் மைய நூலகத்திலும் வரக்கூடிய புத்தகங்களை முறையாக பட்டியலிட்டு வைக்க தேவையான பணியாளர்களும் இடமும் இல்லாத நிலை உள்ளது.

நூலக வரி நிலுவை

மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம்:-

மாவட்ட மைய நூலகத்தை விரிவாக்கம் செய்ய விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கூடுதல் இட ஒதுக்கீடு செய்து தந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும். நூலகர்கள் பற்றாக்குறையினை தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவில் உள்ளாட்சி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் நூலக வரி பொது நூலகத்துறைக்கு செலுத்தப்பட்டாலும் பெருமளவு நிலுவையில் உள்ளது. இது முறையாக செலுத்தப்பட்டால் நூலகங்கள் கூடுதல் வசதியுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

அவைகளுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.

முத்துலட்சுமி:- இன்றைய சூழலில் நூலகத்தை அதிகம் யாரும் பயன்படுத்த முன் வருவதில்லை. அதற்கு காரணம் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் கையில் கைப்பேசி உள்ளதால் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் இணையதளத்தில் சென்று செய்திகளை எளிதில் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த தகவல் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாம் நேரடியாக நூலகம் சென்று படிக்கும் போது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நமது அறிவையும், அனுபவத்தையும், திறமையையும் வளர்வதை இழந்து வருகிறோம். மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

சுகாதாரமற்ற நிலை

ஆசிக் அகமது:-ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது நூலகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் அங்கு சென்று படிப்பதற்கு மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அரிய பல நூல்கள் அங்கு உள்ளன. இந்த நூலகத்தை இடத்தை மாற்றியோ அல்லது சுற்றுப்புற சுகாதார நிலையில் அமைத்தால் கண்டிப்பாக நூலகம் செல்லக்கூடிய வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசுத்தேர்வுகள்

பொறியியல் பட்டதாரி .நந்தினி:- நான் அரசு தேர்வுக்கு தயாராகி வருகின்றேன். அதற்காக தினமும் நூலகம் வந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். அருப்புக்கோட்டை நூலகத்தில் அனைத்து புத்தகங்களும் உள்ளன. என்னைப்போல் ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து பயன்பெற்று தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இங்கு அரசுத்தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை அறிவிப்பு பலகையில் ஒட்டினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

நூலகர் நடராஜன்:- அருப்புக்கோட்டை நூலகத்திற்கு தினமும் ஏராளமான மாணவர்கள் வந்து பயன் பெறுகின்றனர். மேலும் அரசு பணிக்கு தயாராகும் போட்டித் தேர்வுகளின் வசதிக்காக நூலகத்தின் மாடியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நூலகங்களுக்கு இளைஞர்களின் வருகை அதிகமாக தான் இருக்கிறது என்றார்.

வெளிச்சம் இல்லை

சங்கரபாண்டியாபுரம் முரளிதரன்:- சங்கரபாண்டியாபுரம் நூலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. சில சமயங்களில் நூலகத்திற்கு நுழைவதற்குள் அச்சம் அடைய வேண்டிய நிலைமை உள்ளது. மேலும் உள்பகுதியில் வெளிச்சம் இல்லாமல் இருட்டில் அமர்ந்து புத்தகம் படிக்க வேண்டி உள்ளது. புத்தகங்கள் வைக்க அலமாரியும் குறைவாக உள்ளது. நூலகம் எங்களை போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நூலகங்களின் விவரம்

மாவட்ட மைய நூலகம் - 1

நகர்ப்புற நூலகம் - 13

கிளை நூலகம் - 86

ஊர்ப்புற நூலகம் - 56

பகுதி நேர நூலகம் - 1

போட்டித்தேர்வு பயிற்சி மையம்

விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனத்தின் ரூ.35 லட்சம் நிதியுதவியுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு தரைத்தளத்தில் மாவட்ட நூலக அலுவலகமும், முதல் தளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையமும் செயல்படும் என கூறப்பட்டது. ஆனால் போட்டித் தேர்வு பயிற்சி மையம் இன்னும் செயல்படாமல் முடங்கிய நிலையிலே உள்ளது. இதற்கு தகுந்த பயிற்சியாளர்கள் கிடைக்கவில்லை என காரணம் கூறப்படுகின்றது. போட்டி தேர்வுகளுக்கு அரசு நூலகங்கள் கை கொடுக்குமா என வேலைவாய்ப்பை தேடுவோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



Next Story