கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரைணக்கு அரசு உத்தரவு சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரைணக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவமனை களில் சிகிச்ைச பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தாா்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 6 பேர் நேற்று இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.
கள்ளச்சாராயம் விற்பனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந்தேதி இரவு கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. இதை 50-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த சிவானந்தம் மகன் சங்கர் (வயது 55), பெருமாள் மகன் சுரேஷ் (49), கோவிந்தன் மகன் தரணிவேல் (50) ஆகிய 3 பேர் இறந்தனர்.
நேற்று முன்தினம் எக்கியார்குப்பத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ராஜமூர்த்தி (60), ராமு மனைவி மலர்விழி (70), மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்த சித்திரை மகன் மண்ணாங்கட்டி (47) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
இந்த நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எக்கியார்குப்பத்தை சேர்ந்த சக்கரபாணி மகன் விஜயன் (55), மரக்காணத்தை சேர்ந்த எத்திராஜ் மகன் சங்கர் (51), எக்கியார்குப்பம் கேசவவேலு (70), மஞ்சினி மகன் விஜயன்(55), சின்னப்பன் மகன் ஆபிரகாம்(46), கோவிந்தன் மகன் சரத்குமார்(55) ஆகியோரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் மூலம் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
44 பேருக்கு தீவிர சிகிச்சை
மேலும் கள்ளச்சாரயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 44 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முதல்-அமைச்சர் நேரில் ஆறுதல்
இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 2.15 மணிக்கு சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடனடி மருத்துவ சிகிச்சை
எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில், பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பான தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதன் மூலம் அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர்களுக்கு உத்தரவு
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளையும் அளித்து காப்பாற்றும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
முதற்கட்ட விசாரணையில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்றவரிடம் இருந்து வாங்கி குடித்ததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்ய, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
காலி மதுபாட்டிலில் ஊற்றி விற்பனை
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்துள்ளனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அங்கும், மெத்தனால் கலந்த சாராயத்தை காலி மதுபாட்டிலில் ஊற்றி விற்பனை செய்துள்ளனர். இந்த இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படும்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படும்
தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களில் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் பொருட்ம்டு, இந்த 2 பிரச்சினைகளுக்கான மூலக்காரணத்தை கண்டறிய ஏதுவாகவும், இந்த 2 சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படும்.
கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவை முழுமையாக கடைபிடிக்க தவறியவர்கள், இதை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சயமின்றி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை?
இதை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், அதுபோன்று இ்ல்லை, அவர்களது குடும்பத்தினர் பதற்றத்துடன் சொல்கிறார்கள். அனைவருக்கும் உரிய உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.