அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 26 பேர் காயம்
அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 26 பேர் காயம்
திருவையாறு அருகே அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 26 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பஸ்கள் நேருக்கு நேர் மோதல்
தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாக தினந்தோறும் தூத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தஞ்சையில் இருந்து நேற்று காலை புறப்பட்டு திருவையாறு, திருமானூர் வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை தஞ்சையை அடுத்த குருவாடியை சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது 52) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக திருமானூரை அடுத்த பெரியமறையை சேர்ந்த காசிநாதன்(55) என்பவர் இருந்தார்.
திருவையாறு அடுத்த வெள்ளச்சிமண்டபம் அருகே அரசு பஸ் சென்றபோது திருமானூரில் இருந்து திருவையாறு நோக்கி தனியார் பஸ் வந்தது.
26 பேர் காயம்
அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 26 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
அரசு பஸ் டிரைவர் சுந்தர்ராஜ், கண்டியூர் வணங்காமுடி(60), காமரசவல்லி கல்யாணசுந்தரம்(43), ஏலாக்குறிச்சி பரமசிவம்(90), காந்திமணி(40), இளையபெருமாள்(65), காந்திமதி(50), முருகானந்தம்(42), தேவேந்தரி(50), உள்ளிக்கடை சுந்தர்ராஜ் (60), தங்கமணி(45), அந்தணர்குறிச்சி ரேணுகா(40), கீழகாவட்டாங்குறிச்சி சுரேஷ்குமார்(33), குலமாணிக்கம் வீமராஜ்(72), சுள்ளங்குடி கருப்பாயி(57), நாகம்மாள்(65).
திருமானூர் ரேவதி(30), உமாமகேஸ்வரி(29), புள்ளம்பாடி பிரவீன்குமார்(27), வேங்கடமங்கலம் உமாமகேஸ்வரி(33), விளாங்குடி கலியபெருமாள்(65), அரியலூர் மதியழகன்(48), வீரசிங்கம்பேட்டை சந்திரசேகர்(34), திருவையாறு பொன்முடி(68), மஞ்சமேடு ஜானகி(67), திருமானூர் கரைவெட்டி வனரோஜா(42).
6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
காயம் அடைந்த அனைவருக்கும் திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்யப்பட்டது. இவர்களில் அரசு பஸ் டிரைவர் சுந்தர்ராஜ் உள்பட 6 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த தகவல் அறிந்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தால் திருவையாறு-திருமானூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.