அவல நிலையில் அரசுப்பள்ளிகள்...கருணை காட்டுமா கல்வித்துறை
அவல நிலையில் அரசுப்பள்ளிகள்...கருணை காட்டுமா கல்வித்துறை
போடிப்பட்டி
கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களையும் சிறந்த கல்வி சென்றடைவதற்கு அரசுப்பள்ளிகள் உறுதுணையாக இருக்கின்றன. அடித்தட்டு மக்களின் உற்ற நண்பனாக அரசுப்பள்ளிகள் விளங்கி வருகின்றன. நமது நாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த அப்துல்கலாம் போன்றவர்கள் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்துக்கு சான்றாக விளங்கியுள்ளனர். பல்வேறு விளம்பர உத்திகளால் மாணவர்களைக் கவரும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக சத்தமில்லாமல் பல சாதனைகளை அரசுப்பள்ளிகள் நிகழ்த்தி வருகின்றன. அரசுப்பள்ளிகள் என்பவை வறுமையின் அடையாளமல்ல. பெருமையின் அடையாளம் என்ற நிலைக்கு அரசுப்பள்ளிகளை உயர்த்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் பல ஆசிரியர்கள் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். ஆனாலும் பல இடங்களில் போதிய மாணவர்கள் இல்லாமல் பள்ளிகள் மூடப்படும் அவல நிலை ஏன் ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் கொண்டுள்ள மோகம் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டாலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் அடிப்படை கட்டமைப்புகள் பூர்த்தி செய்யப்படாததும் இதற்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றன. கொரோனாவின் கோர விளையாட்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் பல பெற்றோர்களை அரசுப் பள்ளிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலக் கல்வி கிடைக்கும் என்ற நிலை மாறி அரசுப்பள்ளிகளில் ஆங்கிலக்கல்வி கிடைக்கத் தொடங்கியிருப்பதும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும்.
பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள்
இந்தநிலையை தக்க வைத்து மாணவர்கள் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்கின்றனர். அரசுப்பள்ளிகளின் மேல் அவர்களுக்கே நம்பிக்கையில்லாத நிலை தான் உள்ளது. இந்தநிலை மாற வேண்டியது அவசியமாகும்.
இந்தநிலையில் ஒருசில பள்ளிகளில் காணப்படும் பராமரிப்பில்லாத கட்டிடங்கள் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், அரசின் முயற்சியில் பின்னடைவையும் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி அரசுப்பள்ளி கட்டிடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் முழுமையாக பராமரிப்பு மேற்கொள்வதுடன், தேவையற்ற பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வின்சென்ட் ஜோசப்(உடுமலை):-
உடுமலை கச்சேரி வீதியிலுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அருகிலுள்ள கிணற்றை ஒட்டிய சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பள்ளியின் முன் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
சதாம் ஹுசைன்(கோமதிநகர், உடுமலை):-
ஒவ்வொரு குடிமகனும் தனது வருமானத்தில் ஒரு பகுதியை கல்விக்கான வரியாக செலுத்துகிறோம். அந்த பணம் முழுமையாக கல்வி வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும். போதுமான கட்டிடங்கள், சுகாதாரமான கழிப்பிடங்கள் அமைத்து தருவதுடன் தேவையற்ற கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியதும் அவசியமாகும்.
இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
வகுப்பறை பற்றாக்குறை
சங்கீதா, (பெற்றோர்):-
என்னுடைய பிள்ளை நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றான். இந்த அரசு பள்ளி நன்றாக இருக்கிறது. ஆனால் மழை பெய்யும் சமயங்களில் மட்டும் பள்ளி வளாகம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் விளையாட மாணவர்கள் செல்லும்போது வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி விளையாட அனுமதி அளிப்பதில்லை. இதனால் மாணவர்கள் கவலைப்படுகின்றனர். எனவே சேறும், சகதியுமாக உள்ள இடத்தில் மண்கொட்டி சீரமைத்தால் நன்றாக இருக்கும்.
மேலும் பள்ளியில் இருக்கிற கழிப்பிட சுவர் மற்றும் தண்ணீர் செல்லக்கூடிய குழாய் சேதமடைந்தும் உள்ளதாக பிள்ளைகள் கூறுகின்றனர். எனவே சேதமடைந்தவற்றை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சைலா பானு, (செல்லாண்டியம்மன்துறை நகர்):-
செல்லாண்டியம்மன்துறை நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள 50 சதவீத குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படிக்க வைக்கின்றனர். சுமார் 1000 பேர் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் இடநெருக்கடியில் தவிக்கிறார்கள். குறிப்பாக ஒரு வகுப்பறையில் 70 முதல் 80 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இதன்காரணமாக ஒரு வகுப்பறையில் பாதி எண்ணிக்கையிலான மாணவர்கள் மேஜையிலும், மீதி மாணவர்கள் கீழே தரையிலும் அமர்கின்றனர். இதனால் கொசு மற்றும் பூச்சி தொல்லைகளால் மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசல்
மணி, (தொழிலாளி):-
நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ள இடம் குறுகிய சாலை பகுதி என்பதால் பள்ளி நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரமான காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் போக்குவரத்தை மாற்றி அமைக்க போக்குவரத்து போலீசாரை நியமித்தால் நன்றாக இருக்கும். இதனால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இந்த பகுதியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான வேலைகளை விரைந்து முடித்தால் வகுப்பறையில் அதிகளவில் உள்ள மாணவர்களை பிரித்து வகுப்புகளை நடத்த முடியும். தற்போது ஒரு பயிற்சி ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இணைந்து வகுப்பில் பாடம் நடத்துகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும். எனவே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பள்ளிக்கு தன்னார்வ அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர். அதேபோல் அரசும் கூடுதல் உதவிகளை செய்து உதவினால் பள்ளி நன்றாக இருக்கும். மாணவர்களும் சிரமம் இல்லாமல் கல்வி கற்றுக்கொள்வார்கள்.
அப்துல்லா, (நொய்யல் வீதி):-
நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி பள்ளியின் உள்ளே உள்ளது. இதனால் மாணவர்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மூடி அமைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த பணி நடைபெறவில்லை. எனவே இந்த கழிவுநீர் பள்ளிக்கு வெளியே செல்வதற்கும், துர்நாற்றம் வீசாமல் தடுப்பதற்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சுவர் வேண்டும்
சையது முஸ்தபா, (திருப்பூர்):-
பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிதண்ணீர் எடுப்பதற்கு மின்மோட்டார் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவுவதற்கு, முகம் கழுவுவதற்கு தேவைப்படும் சப்பை தண்ணீரை பெறுவதற்கு மாணவிகள் அடிபம்பை பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பள்ளியில் சப்பை தண்ணீர் தொட்டி மற்றும் மின்மோட்டார் அமைத்து மாணவிகளுக்கு குழாய்களில் தண்ணீர் கிடைக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறினர்.
இதேபோல் பூலவாரி சுகுமார் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பல இடங்களில் மேற்கூரை சேதமடைந்து காட்சியளிக்கிறது. குறிப்பாக ஒரு வகுப்பறையின் மேற்கூரை சேதமடைந்தும் மற்றும் சத்துணவு கூடம் மேற்கூரை விரிசலுடன் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும்முன் விரைந்து இந்த மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக காணப்படுவதால் கஞ்சா ஆசாமிகள் சிலர் இங்கே வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி பாதுகாப்பின்றி காணப்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுச்சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும்.
மேலும் செம்மேடு பகுதி பெரியத்தோட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கழிப்பிடத்தின் மேற்கூரை சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே இடிந்து விழும் சூழலில் இருக்கிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி விரைந்து இந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும். இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் தங்களுடைய மரசாமான்களை பள்ளியின் அருகில் போட்டு வைத்திருக்கின்றனர். இதனால் விஷ ஜந்துக்கள் பள்ளியின் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் நுழையும் ஆபத்து இருக்கிறது. இதன்காரணமாக சில ஜன்னல்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் வகுப்பறைக்குள் காற்றோட்டம் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மேலும் கால்நடைகள் பள்ளிக்குள் வருகிறது. எனவே உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நெசவாளர்காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி
திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு நெசவாளர்காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 1700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வளாகம் சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து பள்ளி வளாகத்திற்குள் சென்று குளம் போல் தேங்கி வருகிறது. மேலும் பெரிய அளவில் மழை பெய்யும்போது அங்குள்ள வகுப்பறைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் ஒருசில நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
பாண்டியன்-வாணி (பெற்றோர்):
எனது மகனும், மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும், மழைநீருடன் சேர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தேங்கி விடுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் கால்கூட வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. பள்ளியின் பிரதான வாசலில் உள்ள தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என்றும், அதற்கு இணையாக பள்ளியின் கேட்டை உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக பள்ளி மேலாண்மை குழு சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
ஏ.ஹெச்.டி.ஜோசப் (ஆசிரியர்):
பள்ளி வளாகத்தில் மழைநீர் உள்ளே புகுவதால் மனிதக்கழிவுகளும் உயிரிழந்த சில உயிரிழனங்களின் உடல்களும் சேர்ந்து வருகிறது. இதேபோல் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாம்பு நடமாட்டமும் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தபோது, பள்ளியின் பிரதான வாசலில் உள்ள தடுப்புச்சுவரை உயர்த்தி கட்டுவது என்றும், அதற்கு இணையாக கேட்டை உயர்த்தினால் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டது. ஆனால் 1 ஆண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்து மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். எனவே பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் புகாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---