அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கலசபாக்கம் அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போக்சோ சட்டத்தில் கைது

கலசபாக்கம் அருகே சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55), இவர் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் காளியப்பன், மாணவிகளிடம் பாலியல் தூண்டுதலில் ஈடுபட்டதாக போளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் காளியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார்.

தற்கொலை

அவர் வந்ததில் இருந்து சரிவர சாப்பிடாமலும், தூங்காமலும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

மேலும் கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார்.

இதனால் காளியப்பன், குடும்பத்தினரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறி வந்து உள்ளார்.

இந்த நிலையில் காளியப்பன் இன்றுஅதிகாலை வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயா கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த காளியப்பனுக்கு 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story