அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம்
கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் சக்கம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை சில நாட்களுக்கு முன்பு மாணவ, மாணவிகள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவர் விசாரணை செய்தார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார்.
இடமாற்றம்
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ் திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டி அரசு பள்ளிக்கு நேற்று பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் பிறப்பித்துள்ளார்.