அரசு பள்ளி நிகழ்ச்சி திடீர் ரத்தால் பரபரப்பு
அரசு பள்ளி நிகழ்ச்சி திடீர் ரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரமங்கலம்:
கீரமங்கலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. செரியலூர்-கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு சேந்தன்குடி மற்றும் கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மாவட்டக் கவுன்சிலர் நிதியிலிருந்து பெஞ்ச் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பெஞ்ச்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்குவதாக அ.தி.மு.க. வினர் விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். இந்த நிலையில் திருவரங்குளம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான ரவி கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து கொத்தமங்கலம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பெஞ்ச்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் கட்சி விழா போல நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த நிகழ்ச்சி நடந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வுக்கு கீரமங்கலம் போலீசார் தகவல் கொடுத்த நிலையில் நிழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவர் திரும்பி சென்றார். ஆனால் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பள்ளி நிகழ்ச்சிக்கு வருவார் என்று கொத்தமங்கலம் பள்ளி முன்பு ஏராளமான அ.தி.மு.க. வினர் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.