கழிவறையில் மயங்கி விழுந்து அரசு பள்ளி ஆசிரியர் சாவு


கழிவறையில் மயங்கி விழுந்து அரசு பள்ளி ஆசிரியர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கழிவறையில் மயங்கி விழுந்து அரசு பள்ளி ஆசிரியர் இறந்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் விழுப்புரம் ஏ.டி.எல். நகரில் கடந்த ஒரு வருடமாக ஒரு வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்து விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கு முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் நீண்ட நாட்களாக முதுகு தண்டுவடம் பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் செல்வம், கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதில் அவரது முன்பக்க தலையில் காயம் ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டார்.

இதை அக்கம், பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், வேலூரில் உள்ள செல்வத்தின் குடும்பத்தினருக்கும், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செல்வத்தின் குடும்பத்தினர் விழுப்புரத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் செல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செல்வத்தின் மனைவி விஜய்ஆனந்தி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story