அரசு பள்ளிக்கு கல்வி சீர், நிதி வழங்கிய பொதுமக்கள்
எட்டயபுரம் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர், நிதி வழங்கிய பொதுமக்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரில் 1979-ம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒருங்கிணைந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி திரட்டி, பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு டேபிள், நாற்காலி, பீரோ, மின்விசிறி, கடிகாரம், சாக்பீஸ், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படம் என ரூ.1 லட்சம் மதிப்பில் பொருட்கள் வாங்கினர்.
பின்னர் மேளதாளம் முழங்க பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு வந்தனர்.
அங்கு தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமாரி மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர். மேலும் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.70 ஆயிரம் நிதியும் வழங்கியுள்ளனர்.
பள்ளிக்கு தேவையான கல்வி சீர் மற்றும் வளர்ச்சி நிதி வழங்கிய கிராம மக்களை பலரும் பாராட்டினர்.