வள்ளிபுரம் அரசு பள்ளி மாணவிகளின் கட்டுரை தேர்வு
வள்ளிபுரம் அரசு பள்ளி மாணவிகளின் கட்டுரை தேர்வு
திருப்பூர்
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை (என்.சி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளை புரிந்து கொள்ளுதல் என்ற கருப்பொருளை தலைப்பாக கொண்டு 10 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 2 பேர் ஒரு குழுவாக இருந்து வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் இந்த ஆண்டுக்கான ஆய்வுகளை செய்தனர்.
இந்த ஆண்டு திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 285 வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 285 மாணவர்கள் தங்களின் 143 ஆய்வு அறிக்கையை மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தனர்.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 15 சிறந்த ஆய்வறிக்கைகள் தூத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 550 ஆய்வறிக்கைகளில் இருந்து திருப்பூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் செய்த ஆய்வறிக்கை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வறிக்கை குஜராத்தில் வருகிற 28,29-ந் தேதி நடக்கும் தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
'விவசாய நில மேம்பாடு' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த வள்ளிபுரம் பள்ளி மாணவிகள் ஸ்ரீமதி, பவிஷ்கா ஆகியோர் தங்களின் வழிகாட்டி ஆசிரியர் சேவியர் மேகலா, தலைமை ஆசிரியை ஜோதிமணி, என்.சி.எஸ்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோருடன் சென்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.