இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தேனி அருகே விபத்தில் இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்படடது.
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2000-ம் ஆண்டு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பழனிசெட்டிபட்டி அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் இழப்பீடு கேட்டு அவருடைய குடும்பத்தினர் பெரியகுளம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2005-ம் ஆண்டு இழப்பீடாக ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்து 304 வழங்க ேகார்ட்டு உத்தரவிட்டது. அதில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 813 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மீதி தொகையை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கோர்ட்டில் அவருடைய குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து முத்தையாவின் குடும்பத்தினருக்கு மீதி தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதன்பின்பும் அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் மீண்டும் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கணேசன், இழப்பீடு நிலுவை தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை பெரியகுளம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ரமேஷ் ஜப்தி செய்தார். பின்னர் அந்த பஸ் பெரியகுளம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.