அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்
அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்
புதிதாக கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்முதல்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இல்லாததால் அங்குள்ள வாடகை கட்டிடத்தில் வைத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனால் பெரும்பாலான நெல் மூட்டைகள் வெட்ட வெளியிலேயே வைக்க வேண்டிய நிலை இருந்தது. மழை காலங்களில் வெளியில் அடுக்கி வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் சேதம் அடைந்தது. எனவே வடபாதிமங்கலத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
7 ஆண்டுகள் ஆகியும் திறக்கவில்லை
இந்த கோரிக்கையை ஏற்று உடனே நிறைவேற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உள்ள புனவாசல் என்ற இடத்தில் ரூ.50 லட்சம் மதீப்பீட்டில் புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடவில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்த நெல்களை சாலையோரத்திலும், பாதுகாப்பு அற்ற இடங்களிலும் வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையில் நனைந்து சேதம்
இதுகுறித்து வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி ரகு கூறுகையில், வடபாதிமங்கலத்தில் விவசாய சாகுபடியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு வடபாதிமங்கலத்தில் வாடகை இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அரசு சார்பில் தொடங்கப்பட்டது. ஆனாலும் அந்த இடத்தில் போதுமான இடவசதி இல்லாமல், சாலைகளில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது.
மேலும் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டது. அதனால், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக திறக்க வேண்டும்
இதையடுத்து அரசு சார்பில் வடபாதிமங்கலம் புனவாசலிலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை புதிய கட்டிடம் திறக்கப்படவில்லை. 500 மூட்டைகள் வரை பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டிய புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் பயன்பாட்டிற்கு விடாமல் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக திறக்கப்படாமலே பூட்டியே கிடக்கிறது. தற்போது அறுவடை பணிகள் தொடங்க இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றார்.