மயிலாடும்பாறை-வீரபாண்டி இடையே தடையின்றி அரசு பஸ்சை இயக்க வேண்டும்; அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் மனு


மயிலாடும்பாறை-வீரபாண்டி இடையே தடையின்றி அரசு பஸ்சை இயக்க வேண்டும்; அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் மனு
x

மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு தடையின்றி அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தேனி

மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு தடையின்றி அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாணவ-மாணவிகள் கோரிக்கை

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். இதில், 279 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2019-ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் அதிக வசூல் செய்ததற்காக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜாகீர் உசேனுக்கு தலைமைச் செயலாளரின் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் மனு கொடுக்க வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடமலை-மயிலை தாலுகாக்குழு உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் கடமலை-மயிலை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் திடீரென நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வேறு பஸ்கள் இயக்கப்படாததால், இந்த பஸ் வராத நாட்களில் கல்லூரிக்கு வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, வேலை நாட்களில் இந்த பஸ்சை தடையின்றி இயக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

கடன் தள்ளுபடி

சுக்காங்கல்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் கொடுத்த மனுவில், "ஓடைப்பட்டி அருகே கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்த பலருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக முறையாக தகவலும் கிடைக்கவில்லை. எனவே, ஏழை-எளிய மக்களின் நலன் கருதி கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

சுக்காங்கல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த நல்லம்மாள் கொடுத்த மனுவில், "எனது 2-வது மகன் தழிகருப்பசாமி ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் பொந்தூர் ரெயில் நிலையம் அருகில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுவரை அவரை கொலை செய்தவர்களை கைது செய்யவில்லை. எனவே, கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Next Story