குப்பை அள்ளும் பணியை கண்காணிக்க வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்-மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தகவல்


குப்பை அள்ளும் பணியை கண்காணிக்க வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்-மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தகவல்
x

சேலம் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் அள்ளுவதை கண்காணிக்க வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் கூறினார்.

சேலம்

மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி, கழிப்பிட கட்டிடம் கட்டுதல், மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களை, தொகுப்பூதிய பணியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணி ஓய்வு தூய்மை பணியாளர்களை மாமன்ற அலுவலகத்தில் வைத்து கவுரவப்படுத்த வேண்டும்.

சாலைகளின் இருபுறங்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட வேண்டும். போதுமான பிளம்பர்களை நியமித்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பல்வேறு சாலையோரம் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தெரியாமல் கடைகள் வைக்கப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்.

சாலையை சீர்படுத்த வேண்டும்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் 4 ரோடு அருகே சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் பல விபத்துகள் ஏற்படுகிறது. எனவே 4 ரோடு பகுதியில் சாலையை சீர்படுத்த வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகம் உள்ளது.

இதை கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே உள்ள நாய்கள் பராமரிப்பு கூடம் போன்று மேலும் ஒரு இடத்தில் மையம் அமைத்து நாய்களை பராமரிக்க வேண்டும்.

பழுதாகி உள்ள பள்ளி கட்டிடம், அங்கன் வாடி மையங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்வதை கைவிட்டு பகல் நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் பணிகள் பாதி அளவே நடைபெற்று உள்ளன. பணிகளை முடிக்கும்படி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டால், பணம் வரவேண்டும் என்று கூறுகின்றனர். எனவே தொடங்கப்பட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் விழா விரைவில் நடைபெற உள்ளது. எனவே தேரோட்டத்திற்கு வசதியாக சாலைகளை சீர்படுத்த வேண்டும்.

குப்பை சேகரிக்கும் கிடங்கு

குப்பைகள் தேங்கும் இடத்தில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே இதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு வார்டு பகுதியிலும் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதில் அளித்து பேசும் போது, 'உறுப்பினர்களின் கோரிக்கைககள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

மேலும் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் அள்ளுவதை கண்காணிக்க குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்திலும் இன்னும் 10 நாட்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறினார்.

தொடர்ந்து மாநகரை சுத்தமாக வைப்பது குறித்த விழிப்புணர்வு அடங்கிய பாடல் ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் துணை மேயர் சாரதாதேவி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story