செல்போன்களை திருடிய பட்டதாரி பெண் கைது


செல்போன்களை திருடிய பட்டதாரி பெண் கைது
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வந்த இடத்தில், செல்போன்களை திருடிய பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

செல்போன்கள் திருட்டு

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சார்பில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 26-ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு மையத்துக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வு மையத்துக்கு வெளியே ஒரு இடத்தில், தேர்வர்கள் தங்களது செல்போன்களை வைத்திருந்தனர்.

தேர்வு முடிந்து வெளியே வந்தபோது 3 பேரின் விலை உயர்ந்த செல்போன்கள் மாயமாகி இருந்தது. மர்ம நபர் செல்போன்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தேர்வு மையத்தில் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் போலீசாரையும், தேர்வு எழுத வந்தவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

தனிப்படை விசாரணை

குற்றவாளியை கண்டுபிடித்து, கைது செய்யும் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் இடத்திலேயே செல்போன்கள் திருடப்பட்டிருப்பது போலீசாருக்கு சவாலை ஏற்படுத்துவதை போல அமைந்தது.

இதற்கிடையே செல்போனை பறி கொடுத்த தாடிக்கொம்பு நடுத்தெருவை சேர்ந்த கிருபா (வயது 24) உள்பட 3 பேர், ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு துர்காதேவி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தேர்வு மைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

பட்டதாரி பெண் கைது

திருட்டு போன செல்போன்களின் செயல்பாடுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், செல்போன்கள் இருப்பது சிக்னல் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வீட்டில் இருந்த சுதா (29) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். பட்டதாரியான இவர், சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதன்படி பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரிக்கு வந்து அவர் தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து வெளியே வந்த சுதா, அந்த மையத்தில் இருந்த செல்போன்களை திருடி தனது வீட்டுக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுதாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நிலக்கோட்டை மகளிர் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.


Next Story