பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகர், ஓய்வுப்பெற்ற ராணுவவீரரான இவர் தற்போது காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சொர்ணலதா தோட்டப்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களுக்கு லோகேஷ் (வயது 21), மிதுன் உள்பட 3 மகன்கள் உள்ளனர். பட்டதாரியான லோகேஷ் தந்தையை போன்று ராணுவத்தில் சேருவதற்காக கல்லூரியில் படிக்கும்போதே அதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் தேர்வாகவில்லை. இந்த நிலையில் அவருடைய தம்பி மிதுன் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவத்துக்கு தேர்வானார். லோகேஷ் 3 முறை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வாகாததால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.