போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
x

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை


நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் திறன்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான தனிப்பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப் பட்டது.

இந்த திட்டத்தின் வாயிலாக பணியாளர் தேர்வாணையம், வங்கி பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம் ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போட்டித் தேர்வர்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் (எஸ்.எஸ்.சி.) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர நிலை தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலை தர நிலை தேர்வு, பல்வகை பணி தேர்வு போன்ற தேர்வுகளுக்கான பாடத் திட்டம் ஆப்டிட்யூட், ரீசனிங், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகும்.

தற்போது ஒருங்கிணைந்த மேல்நிலை தர நிலை தேர்வு, பல்வகை பணி தேர்வுகளானது ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமல்லாது தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி

எஸ்.எஸ்.சி.ஆல் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் உத்தேசமாக 100 நாட்களில் 100 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தினந்தோறும் நடத்தப்படும் வகுப்பிற்கான அச்சிடப்பட்ட பாடக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசினா் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மத்திய அரசு பணிகளுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பிரத்தியேக திறன் மிக்க பயிற்றுனர்களை கொண்ட பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும், ஆர்வமும் உள்ள பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் நான் முதல்வன் திட்ட இணையதளத்தில் உள்ள https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC-REGISTRATION.ASPX என்ற முகவரியில் தங்களின் முழு விவரங்களை வருகிற 20-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story