தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு பணித்திறன் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
வேலைக்கு ஏற்ற போதிய திறன் மாணவர்களுக்கு இல்லை என தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை குருநானக் கல்லூரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்டபோது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தருகிறார்கள்.
இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். பணியமர்த்தும் போது பட்டப்படிப்பை விட தனித்திறனையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன.
பொறியியல் படித்த 80% - 90% மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற பதிலே வருகிறது.
பட்டப்படிப்பில் வரலாறு படிப்பவர்களுக்கும் அறிவியல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இளங்கலை பட்டம் முடித்த 70% பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
தேசிய கல்விக்கொள்கை என்பது ஒரு புரட்சிகரமான கல்விக்கொள்கை ஆகும். இந்த கல்விக்கொள்கையின் மூலமாக ஏராளமான பட்டதாரிகளை உருவாக்க முடியும்.இந்த கல்விக்கொள்கை மக்களால் உருவாக்கப்பட்டது என்றார்.