121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

சுதந்திர தினத்தையொட்டி நேற்று பெரம்பலூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலம்பாடி ஊராட்சியில், பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் 2022-23-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப்பணிகளுக்கான திட்ட அறிக்கை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் போதையினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தகவல்களை உடனடியாக போலீசாருக்கோ அல்லது அருகில் உள்ள அரசு அலுவலகங்களுக்கோ தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர், 2 வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மீதமுள்ள 6 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையாம். இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கேள்விகள் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாத வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அரசு அலுவலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.வேப்பூர் ஒன்றியம் பேரளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தன்னை சிலர் தலைவராக செயல்பட விடவில்லை எனவும், என்னை தலைவர் என்று ஊரில் கூற மாட்டார்கள் எனவும், அதனால் பேரளி பஞ்சாயத்தை கலைத்து விடுங்கள் என்றும் காரசாரமாக கூறினார். தலைவர் பஞ்சாயத்தை கலைத்து விடுங்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story