நெல்லை மாவட்டத்தில் 204 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் 204 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 கிராம ஊராட்சிகளிலும் நேற்று காலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திடியூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளில் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு தினம் வருகிற 30-ந்தேதி கடைபிடிக்கப்படுவதையும் முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் அனைவரும் உறுதிெமாழி ஏற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அனிதா, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கபாண்டியன், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், திடியூர் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.