412 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 412 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளில் நாளை(திங்கட்கிழமை) சுதந்திர தினத்தன்று காலை 10 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விரிவாக விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின் விவரங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது.
இது தவிர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம்(பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக்கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.