ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருச்சி

கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவையொட்டி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், உன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி ந.தியாகராஜன், தேசிய கொடியை ஏற்றி வைத்து, ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் உன்னியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.10.93 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரகுராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்தம்மாள், தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணவேணி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி, சரவணகுமார், தொட்டியம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பி.தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் வசந்தபாரதி, காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வை.கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தில் கனிமவள நிதியில் இருந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திலும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பாலங்கள் அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டதும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். காட்டுப்புத்தூர் பேரூராட்சி மற்றும் காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை எம்.எல்.ஏ. ஏற்றினார்.

புள்ளம்பாடி ஒன்றியம்

புள்ளம்பாடி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி அசோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியராஜ், ஒன்றிய பொறியாளர் விமல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லால்குடி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி செயலாளர் கண்ணுசாமி வரவேற்றார். முடிவில் மக்கள் நலபணியாளர் பிச்சைமணி நன்றி கூறினார்.

இதே போல் புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைத் தலைவர் பெரியசாமி, ஒன்றிய சாலை பணி ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா அறிவழகன் தலைமை தாங்கி கூட்டத்தினை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் வரவு, செலவு ஆண்டு தணிக்கை, ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்த விவரம், மேலும் தேர்ந்தெடுக்கப்படும் பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், கால்நடை மருத்துவர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சிவகுமார் வரவேற்று, நன்றி கூறினார்.

பரிசுகள்

புள்ளம்பாடி ஒன்றியம் சரடமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழாவும், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கப்பொண்ணு செல்வம், அரசு அலுவலர் மயில்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை நடத்தி பேசினார். கூட்டத்தில் பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் நதியா வரவேற்று நன்றி கூறினார். இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் சுதந்திர தின விழாவும், தொடர்ந்து கிராம சபை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம இளைஞர்கள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சோமரசம்பேட்டை

சோமரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கீழ வயலூர் சாய்பாபா கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குணவதி துரைபாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். வாசன் நகரில் உள்ள பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் வீரலெட்சுமி ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆரோக்கிய ஆனந்த் நன்றி கூறினார்.


Next Story