குடியரசு தினவிழாவையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் நேற்று குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும், பயனாளிகள் தேர்வு குறித்தும் பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனை செய்யப்பட்டது.
கலெக்டர் பங்கேற்பு
வீரபாண்டி ஊராட்சியில் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் அருகே நேற்று நடந்த குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார். அப்போது, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஊராட்சிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலசந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் தமிழரசி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.