தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தாத்தா-பேரன் பரிதாப சாவு


தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தாத்தா-பேரன் பரிதாபமாக இறந்தனர்.

ராமநாதபுரம்

கமுதி,

தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தாத்தா-பேரன் பரிதாபமாக இறந்தனர்.

தோட்டத்துக்கு ெசன்றனர்

விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர் தன்னுடைய பேரன் மோகனிசுடன் (9) நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடிமன்னார்கோட்டைக்கு சென்றிருந்தார். அங்குள்ள உறவினர் ஒருவரது தோட்டத்துக்கு சென்றிருந்தனர்..

ஏற்கனவே நேற்று முன்தினம் கமுதி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து இருந்தது. பலத்த காற்று காரணமாக தோட்டத்தில் மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்தன.

தாத்தா-பேரன் பலி

ேதாட்டத்துக்கு வந்த சிறுவன் மோகனிஷ் எதிர்பாராமல் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்து விட்டான். இதனால் அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே தாத்தா கணேசன் ஓடி வந்து பேரனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் 2 பேரும் அங்கேயே பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே தாத்தா-பேரனை தேடி அவர்களது உறவினர்களானஎம்.ரெட்டியபட்டியை சேர்ந்த சுப்பராஜ்(62), மணி(50) ஆகிய இருவரும் நேற்று மாலை 3.30 மணிக்கு தோட்டத்துக்கு வந்தனர். அங்கு இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

போலீஸ் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் உறவினர்கள் திரண்டனர். கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மயக்கம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாத்தா-பேரன் உடல்களை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story