சேலத்தில் பயங்கரம்: 4 வயது சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற பாட்டி-போலீசார் விசாரணை


சேலத்தில் பயங்கரம்: 4 வயது சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற பாட்டி-போலீசார் விசாரணை
x

சேலத்தில் 4 வயது சிறுமியை கழுத்தை நெரித்து பாட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

4 வயது சிறுமி

சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல்குமார். இவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு 4 வயதில் மதுப்பிருத்திகா என்ற மகள் இருந்தாள்.

இதனிடையே மீண்டும் கர்ப்பமான மேகலா பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செவ்வாய்பேட்டை சோளப்பாடி சுப்பிரமணியர் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு மேகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கீர்த்திக் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் மேகலாவை, அவருடைய தாயார் சாந்தி (வயது 52) துணியை காயப்போடுவதற்காக மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து சாந்தி, மதுப்பிருத்திகா இருந்த அறைக்கு சென்றார். அப்போது அவர் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.

பெண் குழந்தை சாவு

துணியை காயப்போட்டு விட்டு கீழே வந்த மேகலா, தாய் சென்ற அறையின் கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மேகலா சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

இதைகேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் சாந்தி, குழந்தை கீர்த்திக் படுத்திருந்த மற்றொரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அந்த அறையின் கதவும் உடைக்கப்பட்டது.

உள்ளே புகுந்த அவர்கள் சாந்தியிடம் இருந்து கீர்த்திக்கை மீட்டனர். இதற்கிடையில் முதல் அறையில் சுயநினைவின்றி கிடந்த மதுப்பிருத்திகாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் மதுப்பிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

கொலை செய்த பாட்டி

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன், செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சாந்தி கடந்த 6 மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் குழந்தை மதுப்பிருத்திகாவை அவரது பாட்டி சாந்தி கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். மற்றொரு குழந்தை கீர்த்திக்கை கொலை செய்ய முயன்ற போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை காப்பாற்றியது தெரியவந்தது.

பரபரப்பு

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மதுப்பிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. மேலும் கொலை செய்த சாந்தி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுமியை பாட்டியே கழுத்தை நெரித்துக்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story