3 மணி நேரமாக படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் காத்திருந்த மூதாட்டி
நிலத்தை மகன் பெயருக்கு மாற்ற இரணியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 3 மணி நேரமாக மூதாட்டி ஆம்புலன்சில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திங்கள்சந்தை:
நிலத்தை மகன் பெயருக்கு மாற்ற இரணியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 3 மணி நேரமாக மூதாட்டி ஆம்புலன்சில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
படுத்த படுக்கையான மூதாட்டி
இரணியல் அருகே கொடுப்பைக்குழி சாமிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராஜகமலம் (வயது 71). இவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவருடைய மகன் ராஜ்மோகன் (45). மூதாட்டி ராஜகமலத்திற்கு சொந்தமான நிலம் சாமிவிளையில் உள்ளது.
இதை அவரது மகன் பெயருக்கு எழுதி கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து இரணியல் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் எழுதிக்கொடுக்க ஆன்லைனில் டோக்கன் எடுத்துக் கொண்டனர். அதில் டோக்கன் நம்பர் ஒன்று எனவும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பதிவு நடைபெறும் என இருந்தது. இதையடுத்து ராஜ்மோகன் நேற்று காலை ராஜகமலம் உட்கார முடியாது என்பதால் ஆம்புலன்ஸில் படுக்க வைத்து இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்.
ஆம்புலன்சில் காத்திருந்தார்
ஆனால் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அலுவலர் இல்லை. விடுப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பொறுப்பு சார்பதிவாளரும் நீண்ட நேரமாகியும் வராததால் காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரை ராஜகமலம் ஆம்புலன்சிலேயே காத்திருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே பொறுப்பு சார்பதிவாளர் 12.30க்கு மணிக்கு வந்து சேர்ந்தார். படுத்த படுக்கையாக மூதாட்டி நீண்ட நேரம் காத்திருந்ததால் அவரது பத்திரத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூதாட்டியை வீல்சேர் மூலம் அழைத்துச் சென்று பயோமெட்ரிக் மூலம் அவரது கை ரேகையை பதிவு செய்தனர். ஆனால் அந்த நேரம் பயோமெட்ரிக் வேலை செய்யாததால் அவரது கைரேகை பதிவாவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருந்து பதிவு செய்ய வந்தபோது கைரேகை பதிவாகாததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பயோமெட்ரிக் மென்பொருள் ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு பகல் 1 மணி அளவில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. படுத்தப்படுக்கையாக இருந்த மூதாட்டி ஆம்புலன்ஸில் நீண்ட நேரம் காத்திருந்து பத்திரம் பதிந்த சம்பவம் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.