மூதாட்டியின் 100-வது பிறந்த நாள் விழா


மூதாட்டியின் 100-வது பிறந்த நாள் விழா
x

திருவண்ணாமலையில் 4 தலைமுறையை பார்த்த மூதாட்டியின் 100-வது பிறந்த நாள் விழா நடந்தது.

திருவண்ணாமலை

இன்றைய நவீன காலத்தில் பெற்றோரை வீட்டில் வைத்து பார்த்து கொள்வதை சிலர் சிரமமாக கருதுகின்றனர்.

சிலர் வீட்டில் யாரேனும் முதியவர்கள் இருந்தால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்ற அவல நிலையும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது.

ஆனால் திருவண்ணாமலை அருகில் உள்ள துர்க்கைநம்மியந்தலில் 100-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடிய மூதாட்டியின் நிகழ்ச்சியை உறவினர்கள் பத்திரிக்கை அடித்து கிராமமே இணைந்து கோலாகலமாக கொண்டாடி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட துர்க்கை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணு. இவரது மனைவி வீரம்மாள். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள், 16 பேரன்கள், 6 பேத்திகள், 13 கொள்ளு பேரன்கள், 17 கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இவர் அவரது 4-வது தலைமுறையை பார்த்தவர்.

இவர் 1923-ம் ஆண்டு பிறந்தார். வீரம்மாளின் 100-வது பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதற்காக பத்திரிக்கை அடித்து உற்றார், உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கினர்.

வீரம்மாளின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அப்போது அவர் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் கேக்வெட்டி கொண்டாடினர். இந்த விழாவில் உறவினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனால் கிராமமே விழாக் கோலமாக காட்சி அளித்தது.


Next Story