மூதாட்டி கொலையில் பேரன் கைது


மூதாட்டி கொலையில் பேரன் கைது
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குரும்பூர் அருகே மூதாட்டி கொலையில் பேரன் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளுவர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவி நாகூராள் (வயது 85). இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா (35), பழனிச்சாமி (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். காசி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.

அதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி காலை பழனிச்சாமி தனது பாட்டி நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது அவரது வீட்டின் கதவு உள்ளே பூட்டாமல் இருந்தது. பாட்டி நாகூராளை அழைத்தும் அவர் வெளியே வராததால் பழனிச்சாமி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு நாகூராள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இசக்கியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். ஒரு வருடமாகியும் இந்த கொலை வழக்கில் குற்றவாளி சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தனிப்படையினருக்கு உத்தரவிட்டார். தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் துப்பு துலங்கியது. அவர்கள் நாகூராளின் மூத்த பேரன் ராஜாவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் நகைக்காக பாட்டி நாகூராளை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மற்றும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ராஜாவை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story