கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
பர்கூர் அருகே கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம், கொண்டப்பநயனப்பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, அஞ்சூர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கிரானைட் கற்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி கிருஷ்ணகிரி கனிம வளத்துறை அதிகாரிகள் இரு மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது குப்பத்தில் இருந்து காளி கோவில் வழியாக பர்கூருக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதி இன்றி கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.