மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க வேண்டும்


மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க வேண்டும்
x

அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கி சிறப்பான முறையிலும், துரிதமான முறையிலும் கடனுதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

அதேபோல் அனைத்து துறைகளுக்கும் வங்கிக்கடன்கள் தகுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு 100 சதவீதம் வங்கிக்கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு தமிழகத்திலேயே உணவு பொருட்கள் பதப்படுத்துவதில் திருவண்ணாமலை மாவட்டம் தான் அதிக வங்கிக்கடன்களை வழங்கி முதலிடத்தில் உள்ளது

. மேலும் தாட்கோ கடன், மகளிர் கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறிக்கடன், வேளாண்மை விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானிய திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜெயம், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சோமசுந்தரம், மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன் உள்பட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story