50 சதவீத மானிய விலையில் புல் நறுக்கும் கருவி


50 சதவீத மானிய விலையில் புல் நறுக்கும் கருவி
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீத மானிய விலையில் புல் நறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளதாகவும், இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்

கால்நடைகளின் பராமரிப்பு செலவை குறைப்பதில் பசுந்தீவனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மகசூல் தரக்கூடிய சி.ஓ.4, சி.ஓ.5, தீவன சோளம், தட்டைப்பயிறு, காப்ஸ் 29, வேலிமசால் போன்ற அதிக புரதசத்து நிறைந்த பயிர்களை வளர்த்து கறவை மாடுகளுக்கு இதர தீவனங்களுடன் கலந்து வழங்க வேண்டும். இதன் மூலம் அடர்தீவனத்தின் தேவை குறைந்து பால் உற்பத்திக்கான செலவினம் குறைந்து லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த தீவனங்களை புல்நறுக்கும் கருவி மூலம் நறுக்கி கால்நடைகளுக்கு வழங்குவதால் பசுந்தீவனம் விரயத்தை குறைக்கலாம். விவசாயிகள் வாழ்க்கை தரத்தை சீராக மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

மானியத்தில் புல் நறுக்கும் கருவி

அதன்படி, கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீத (ரூ.16 ஆயிரம்/அலகு ஜி.எஸ்.டி. உள்பட) மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ரூ.9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 2 குதிரை திறன் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்கக் கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி. விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊடு பயிர்

மேலும் இத்திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியம் வழங்க ரூ.60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும், குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி., எஸ்.டி. விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story