அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா
ஆரணியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஆகாய மார்க்கமாக வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆரணி
ஆரணியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஆகாய மார்க்கமாக வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயானகொள்ளை விழா
ஆரணி டவுன் பருவத ராஜகுல தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான கொள்ளை விழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. பகலில் உற்சவர் அம்மனை 18 கரங்கள் கொண்டு மலர்களால் நூதன புஷ்பலக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அப்போது நேர்த்திக்கடன் வேண்டி பக்தர்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு ஆகாய மார்க்கமாக கிரேன் உதவியுடன் வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் எலுமிச்சம் பழம், வில்வ இலை, இனிப்பு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டனர். அதனைத்தொடர்ந்து தனித்தனியாக பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு ஆகாயம் மார்க்கமாக சென்று மாலை அணிவித்தனர்.
அந்தரத்தில் தொங்கியபடி...
தொடர்ந்து லாரியில் 6 பக்தர்கள் உடலில் அலகு குத்தி கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு வழியாக சென்று கமண்டல நாக நதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பெரிய களிமண்ணால் உருவாக்கப்பட்ட அம்மன் உருவம் அருகில் நின்று மயான கொள்ளை விழா நடத்தினர்.
அப்போது பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், சாக்லேட், இனிப்பு போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல சமூகத்தினர் செய்திருந்தனர்.
ஊர்வலம்
மேலும் ஆரணி காந்தி ரோட்டில் அண்ணா சிலை அருகே அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயான கொள்ளை விழாவையொட்டி பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
விழாவை முக்கிய நிகழ்வாக இன்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மனை 16 கைகளுடன் கூடிய சிறப்பு அலங்காரத்துடன் கமண்டல நாக நதிக்கரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.
அப்போது கோவில் வளாகத்தில் அமர்ந்த கோலத்தில் கிரேன் உதவியுடன் உடலில் அலகு குத்திக் கொண்டு பக்தர் அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஆகாய மார்க்கமாக பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு அம்மனுக்கு மாலை அணிவித்தார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல சமூகத்தினர், விழா குழுவினர், தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.