லாரிகளில் ஏற்றி செல்லும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டுவதால் அவதி


லாரிகளில் ஏற்றி செல்லும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டுவதால் அவதி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் லாரிகளில் ஏற்றி செல்லும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டுவதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் லாரிகளில் ஏற்றி செல்லும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டுவதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நாகை -கும்பகோணம் சாலை

திருமருகல் பகுதியில் நாகை -கும்பகோணம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், திருபுகலூர், ஏனங்குடி, சன்னாநல்லூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

இவ்வாறு செல்லும் லாரிகள் அதிக அளவில் ஜல்லிகற்களை ஏற்றி செல்கின்றன. இதனால் லாரிகளின் விளிம்புகளில் இருந்து ஜல்லிகற்கள் சாலையில் கொட்டுகிறது. மேலும் லாரியின் விளிம்பிற்கு மேலே குவியலாக ஏற்றி செல்வதால் இதன் துகள்கள் காற்றில் பறந்து பின்னால் வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து பாதிக்கப்படுகின்றனர். சாலையில் கொட்டி கிடக்கும் ஜல்லி கற்களால் துகள்களாக மாறி சாலையின் இரு பக்கங்களிலும் குவிந்து கிடக்கிறது.

லாரியிலிருந்து சிதறும் ஜல்லிகற்கள்

இதனால் அந்த சாலையை கடந்து மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதில் சிலபேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. எனவே லாரிகளில் ஜல்லி கற்கள் கொண்டு செல்லும் போது அளவுக்கு அதிகமாக ஏற்றாமலும், மேலும் ஜல்லிகற்கள் லாரிகளில் இருந்து சிதறி சாலையில் கொட்டாமல் இருக்க தார்பாய்கள் கொண்டு மூடியும் கொண்டு செல்ல வேண்டும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து கடந்த சில நாட்களாக மேற்கண்டவாறு கடைபிடித்து வந்த லாரிகள் தற்போது மீண்டும் அதிக அளவில் ஜல்லிகற்களை ஏற்றி மலை போல் குவித்து ஏற்றி செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story