குடியாத்தம் பகுதியில் மயானக்கொள்ளை விழா
குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் மயானக்கொள்ளை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மயானக்கொள்ளை
குடியாத்தம் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8 இடங்களில் மயானக்கொள்ளைகள் நடைபெற்றது. குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் இரண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யமகாநதி ஆற்றை அடைந்தது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற தரையில் ஏராளமான பெண்கள் படுத்து இருந்தனர். அவர்களை மிதித்தபடி பூங்கரகம் கொண்டு செல்லப்பட்டது. மயான கொள்ளையை முன்னிட்டு கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் உருவத்தில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை எடுக்க ஏராளமான இளைஞர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனாலும் நூற்றுக்கணக்கானோர் முட்டைகளை எடுத்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
இதேபோல் புவனேஸ்வரி பேட்டை, குடியாத்தம் அடுத்த வடக்கு பட்டறை, பரதராமி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வி.மோட்டூர,் கொத்தூர், கதிரிகுளம், தட்டிமாணப்பள்ளி ஆகிய ஊர்களிலும் மயான கொள்ளை நடைபெற்றது.
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்து வந்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுண்ணாம்பு பேட்டை உள்பட குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் முன்னோர்களுக்கு, அவர்களுடாய குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர்.