வாழப்பாடி அருகே ஆட்டு குடலை உருவி மாலையாக போட்டு நடந்த மயான கொள்ளை திருவிழா-ஆட்டுக்குட்டிகளை பெண்கள் கடித்து ரத்தம் குடித்த வினோதம்


அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் குடலை மாலையாக செய்து அம்மன் வேடம் அணிந்த பக்தர் ஊர்வலமாக வந்த மயான கொள்ளை திருவிழாவில், ஆட்டுக்குட்டிகளை பெண்கள் கடித்து ரத்தம் குடித்த வினோதம் நிகழ்ந்தது.

சேலம்

வாழப்பாடி:

வினோத திருவிழா

நாம் கோபத்தில் இருக்கும் போதோ..சண்டையிடும் போதோ.. "குடலை உருவி மாலையாக போட்டு விடுவேன்" என்று சொல்ல கேட்டிருப்போம். உண்மையிலேயே குடலை மாலையாக போட்டு ஊர்வலமாக சென்று நடந்த வினோத மயான கொள்ளை திருவிழா சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில் நடந்தது.

நரி பொங்கல், முறத்தால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா, ஆண்கள் மட்டும் வழிபடும் முனியப்பன் கோவில் என வினோத திருவிழாவிற்கு பெயர் போன வாழப்பாடி பகுதி கிராம மக்கள் ஆட்டுக்குடலை மாலையாக அணிந்து ஊர்வலமாக சென்ற வினோத மயான கொள்ளை திருவிழா சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சின்னம நாயக்கன் பாளையம் கிராமத்தில் தான் நடந்தது.

ஆண்டுதோறும் மாசி அமாவாசை தினத்தன்று சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் பெரியநாயகி அம்மன் கோவிலில் குவிந்து விடுவார்கள். அங்கு பக்தர்கள் அம்மன் வேடம், முறத்துடன் காட்டேரி வேடம், பிசாசு வேடம், என பல்வேறு வேடங்களை அணிந்து பெரியநாயகி அம்மனை வணங்கினர். அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் குடலை மாலையாக செய்து அம்மன் வேடம் அணிந்த பக்தர் ஊர்வலமாக வந்தார்.

ஆட்டுக்குட்டிகளை கடித்து ரத்தம் குடித்தனர்

இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியை காண வாழப்பாடி அருகே உள்ள சுற்றுப்புற கிராம மக்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். அருகிலுள்ள மயானத்திற்கு வந்த காட்டேரி மற்றும் அம்மன் வேடம் அணிந்தவர்கள் அங்கிருந்த ஆட்டுக்குட்டிகளை வாயால் கடித்து ரத்தம் குடித்தனர். அப்போது அங்கு சாமி அருள் வந்து ஆடிக்கொண்டிருந்த அனைத்து பெண்களும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியாக எடுத்து கடித்து ரத்தம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது.

வழக்கமாக காட்டேரி வேடம் அணிந்தவர் மட்டுமே ஆட்டுக்குட்டியை கடிக்கும் வழக்கம் இருந்தது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அதிக அளவில் ஆட்டுக்குட்டிகளை கொண்டு வந்ததால் காலப்போக்கில் பெண்களும் ஆட்டுக்குட்டிகளை கடித்து ரத்த குடிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவு சோறு

மேலும் ரத்த காவு கொடுத்த இடத்தில் பூசாரி வேடமிட்டவர் அருள் வந்து ஆடி அங்கு ஏற்கனவே மண்ணால் செய்யபப்பட்ட அம்மன் உருவத்தை கலைத்து வீசி தெரிந்த சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாத பெண்கள் "காவுசோறு" என்று சொல்லக்கூடிய கொள்ளு சோற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இது குறித்து இப்பகுதி பெண்கள் கூறிய போது, காவு சோறு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது எங்கள் கிராம மக்களின் நம்பிக்கை என்று தெரிவித்தனர்.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் கூட.. குடலை உருவி மாலையாக போட்டு.. குட்டி ஆடுகளை கடித்து ரத்தம் குடித்து.. "காவு சோறு" சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது இப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Next Story