காதலுக்கு பச்சைக்கொடி... விடிந்தால் திருமணம்:40 பவுன் நகை, பணத்துடன் மணமகன் காதலியுடன் ஓட்டம்:தேனியில் பரபரப்பு சம்பவம்


காதலுக்கு பச்சைக்கொடி... விடிந்தால் திருமணம்:40 பவுன் நகை, பணத்துடன் மணமகன் காதலியுடன் ஓட்டம்:தேனியில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டி, திருமண ஏற்பாடு செய்த நிலையில் அதே காதலியுடன் 40 பவுன் நகை, ரூ.1 லட்சத்துடன் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

காதலுக்கு சம்மதம்

தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் பி.எஸ்சி. படித்துவிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ந்தேதி அந்த வாலிபர் தனது காதலியை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

தனது பெற்றோரிடம் அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்து, அவரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இது பெற்றோருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர், அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

காதலியுடன் ஓட்டம்

திருமணத்துக்காக பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர். தேனி பங்களாமேட்டில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை அந்த வாலிபரின் பெற்றோர் செய்து இருந்தனர்.

விடிந்தால் அந்த வாலிபருக்கு அவருடைய காதலியுடன் திருமணம் என்று இருந்த நிலையில், நள்ளிரவில் காதல் ஜோடி இருவரும் மாயமாகினர். அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நகை, பணம்

இதுகுறித்து அந்த வாலிபரின் தாய், தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகனுக்கு, அவர் காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த நிலையில், தனது மகன் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், காலியிடத்தின் பத்திரம் மற்றும் ஒரு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காதலித்த பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், பணம், நகையுடன் மணமகன், மணப்பெண்ணான காதலியை அழைத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே திருமணம் நின்ற தகவல் தெரியாமல் உறவினர்கள் சிலர் மணமகனின் வீடு மற்றும் திருமணம் நடத்த திட்டமிட்ட கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Related Tags :
Next Story