பசுமை புத்தாய்வு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பசுமை புத்தாய்வு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பசுமை புத்தாய்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது, முதல்-அமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்க்கை முறை போன்ற துறைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்களுக்கான தளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கும், முதல்-அமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்கள், முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், இத்திட்டத்திற்கான அறிவுசார் பங்குதாரராக செயல்படும். ஒரு திட்டத் தலைவர் மற்றும் 40 பசுமைத் தோழர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம் மூலமாக இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

முக்கிய நோக்கம்

தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தலைமை தாங்கும் விதமாக சுற்றுச்சூழல் ரீதியாக முன்னேறிய மாநிலமாக மாற்றுவது, சுற்றுச்சூழல்சார் கொள்கைகள் வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தில் உறுதி மிக்க இளைஞர்களை ஈடுபடுத்துதல், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீவிர ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளின் மூலம் அறிவு களஞ்சியத்தை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பசுமைத் தோழர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கிய பங்காற்றுவார்கள். முக்கிய அரசு திட்டங்களின் செயலாக்கத்திற்கு பசுமை தோழர்கள் துணை புரிவர். சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் மீண்டும் மஞ்சப்பை போன்ற சூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற சேவைகளை ஆற்றுவார்கள்.

2 ஆண்டு சேவை

தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் 2 ஆண்டுகளுக்கு சேவையாற்றுவர். இக்காலகட்டத்தில், அவர்களுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படும். அவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும்.

பசுமைத் தோழர்கள், 2 ஆண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக் கழகத்திடம் இருந்து ''கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை'' என்ற முதுகலை பட்டயப் படிப்பிற்கான பட்டத்தையும் பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இயக்குனர் தீபக் பில்கி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story