பசுமை தமிழகம் திட்டத்தில் தொழிலாளர்கள் மரக்கன்றுகளை நட்டதற்கான புகைப்படத்தை இணையதளத்தில் அனுப்ப வேண்டும் அதிகாரி அறிவுரை
பசுமை தமிழகம் திட்டத்தில் தொழிலாளர்கள் மரக்கன்றுகளை நட்டு, அதற்கான புகைப்படத்தை இணையதளத்தில் அனுப்ப வேண்டும் என அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவினை 10 ஆண்டுகளில் புவிப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக பசுமை தமிழகம் என்ற திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார். அதன்படி தொழிற்சாலைகள் சட்டப்பிரிவின்படி மாவட்ட விவசாய அலுவலரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்கள் நடவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் தற்போது ஒரு வார காலத்திற்குள் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகளை நடுவதற்கு, ஒவ்வொரு துறைக்கும் இலக்கு நிர்ணயம் செய்து, அப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.
மட்கும் குப்பை
அதனால் ஈஷா யோகா மையம் நாற்றங்கால், வனத்துறை ஆகியவற்றிடம் இருந்து கன்றுகளை பெற்று பராமரிப்பில் வைத்து மரக்கன்றுகளை நடுவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும் உரங்கள், இயற்கை உரங்கள், மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஒரு வருடத்துக்கு மேலான கன்றுகளையே பெற்று நட வேண்டும். குறைந்த மாத அளவில் உள்ள கன்றுகளை நட்டால் உரிய வளர்ச்சி இருக்காது. எனவே தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒன்று என்ற விகிதத்தில் குறைந்தது 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிமம் எனில் 5 ஆயிரம் மரக்கன்றுகளும், ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிமம் எனில் ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டு, அதன் விவரம் புகைப்படத்துடன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இலக்கு
மேலும் idishcdr@gmail.com அல்லது dd.dish.cuddalore@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மரம் நடப்படும் நாள் மற்றும் நேரத்துடன் கூடிய Geotagged புகைப்படம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த மரக்கன்றுகளை 100 சதவீதம் வளர்ச்சியடையும் வரை நன்கு பராமரித்திட வேண்டும். எனவே மரம் நடும் பணியை உடனே தொடங்கி, வருகிற 1-ந் தேதிக்குள் இலக்குகளை முடிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பர்வதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.