பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும்


பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலை சரிவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கொள்முதல் விலை சரிவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் பச்சை தேயிலையின் கொள்முதல் விலை கிலோ ரூ.11 ஆக குறைந்து உள்ளது. மழை, வெயில், குளிர் போன்ற காலநிலை மற்றும் அட்டைப்பூச்சி உள்ளிட்ட உயிரினங்கள் தாக்குதலை சமாளித்து தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கொள்முதல் விலை சரிவால் தோட்டங்களை பராமரிக்க முடியாமல் உள்ளனர். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியவில்லை. பெற்றெடுத்த பிள்ளை போல் பராமரித்த தோட்டத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்லவும் மனம் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் விலை அடியோடு சரிந்ததால் தமிழக அரசு சார்பில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.2 மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே மீண்டும் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

காலநிலை மாற்றம்

கூடலூர் விவசாயி அனந்த சயனம்:-

கூடலூர் பகுதியில் தொடர் கனமழை, பனிமூட்டம் என காலநிலை மாற்றத்தால் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நியாயமான விலை கிடைக்காததால் பராமரிப்பு பணியும் மேற்கொள்ள முடியவில்லை. பச்சை தேயிலைக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீணாகி வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தேயிலை விவசாயம் நலிவடைந்து வெளிநாடுகளில் இருந்து தேயிலைத்தூள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்படலாம். எனவே விவசாயிகளுக்கு சோதனையான இக்காலகட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதார பாதுகாப்பு

கூடலூர் ஓவேலி கேதீஸ்வரன்:-

ஏக்கருக்கு சுமார் 35 கிலோ வரை பச்சை தேயிலை அறுவடை செய்யப்படுகிறது. தற்போது கிலோ ரூ.11 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. இன்றைய செலவினங்களை கணக்கிட்டால் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் தேயிலைத்தூள் கிலோ ரூ.210 வரை விற்கப்படுகிறது. பச்சை தேயிலை கிலோ ரூ.25 என நிர்ணயித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

தேயிலை ஏல மையத்தை முறைப்படுத்தினால் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு தான். ஆனால் உரிய விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். அதுவரை தேயிலை விவசாயிகளின் வாழ்க்கை போராட்டமாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்

நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் ஐ போஜன்:

கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலை கொள்முதல் விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது.

குறைந்தபட்ச கொள்முதல் விலையாக 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்றிணைத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். விலை வீழ்ச்சியால் சிறு தேயிலை விவசாயிகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வேறு தொழில்களில் ஈடுபடுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே சிறு தேயிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க இந்திய தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது கிடைத்தால் மட்டுமே தேயிலை விவசாயிகள் நஷ்டமடையாமல் தடுக்க முடியும். இதேபோன்று கடந்த காலங்களில் மாநில அரசு வழங்கியது போன்று மீண்டும் பச்சை தேயிலைக்கு மானியம் வழங்க தமிழக அரசும் முன்வர வேண்டும்.


Next Story