பச்சை தேயிலை மகசூல் குறைவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது என்று ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் தெரிவித்தார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது என்று ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் தெரிவித்தார்.
தேயிலை மகசூல்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள். மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல, மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் துரித வளர்ச்சி காலமாக உள்ளது.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் மந்த வளர்ச்சி காலமாக இருந்து வருகின்றன. தேயிலை செடியில் கொழுந்துகள் நன்கு வளர சூரிய ஒளி தேவைப்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் துரித வளர்ச்சி பருவ காலமான அக்டோபர் மாதத்தில் கடந்த ஆண்டை விட பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:-
900 கிலோ
தேயிலை செடிகளில் கொழுந்து வளர தினமும் குறைந்தபட்சம் 4 மணி நேரம் சூரியஒளி இருக்க வேண்டும். அப்போது தான் இலைகள் பச்சையம் சேகரித்து பச்சை தேயிலையின் மகசூல் அதிகரிக்கும். கடந்த அக்டோபர் மாதத்தில் சூரிய ஒளி அதிக அளவு இல்லாமல், மேகமூட்டமாகவும், மழையாகவும் இருந்தது. இதனால் துரித வளரச்சி பருவகாலமான கடந்த மாதத்தில் பச்சை தேயிலை மகசூல் குறைவாக இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில பச்சை தேயிலை மகசூல் ஒரு ஹெக்டேருக் 1,040 கிலோ கிடைத்தது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஒரு ஹெக்டேருக்கு 900 கிலோ கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை அதிகளவு இருந்ததால் சூரிய ஒளி கிடைக்காமல், பச்சை தேயிலை மகசூல் குறைந்தது. இந்த ஆண்டும் மழை பெய்வதால் மகசூல் எவ்வாறு இருக்கும் என்பது மாத முடிவில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.