பச்சை தேயிலை மகசூல் குறைவு
கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பச்சை தேயிலை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள். மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் துரித வளர்ச்சி காலமாக உள்ளது.
தேயிலை செடியில் கொழுந்துகள் நன்கு வளர சூரிய ஒளி தேவைப்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் துரித வளர்ச்சி பருவ காலமான அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக தேயிலை கொழுந்துகள் கருகி விடும்.
விவசாயிகள் கவலை
ஆனால், தற்போது பனிப்பொழிவு இல்லா விட்டாலும், தொடர் மழை, மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை காரணமாக சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொப்புள நோய் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி பல பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.19 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. முதல் தர தேயிலைக்கு ரூ.25 வரை விலை கிடைக்கிறது.
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், தேயிலை செடிகளில் கொழுந்து வளர தினமும் குறைந்தபட்சம் 4 மணி நேரம் சூரியஒளி இருக்க வேண்டும். அப்போது தான் இலைகள் பச்சையம் சேகரித்து பச்சை தேயிலையின் மகசூல் அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாக சூரிய ஒளி அதிகளவு இல்லாமல், மேகமூட்டமாகவும், மழையாகவும் இருந்தது. இதனால் துரித வளரச்சி காலத்தில் பச்சை தேயிலை மகசூல் குறைவாக உள்ளது என்றனர்.