முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு


முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தான் படிக்கும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த சிறுமி ஆராதனா, வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் படிக்கும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தருமாறு வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சமீபத்தில் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி எழுதிய கடிதத்தை பற்றி பேசியதுடன், அப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.35½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவித்தார்.

இதையடுத்து மாணவியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி பாராட்டியதுடன், நன்றாக படிக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் மாணவி ஆராதனாவை திப்பணம்பட்டி ஊர் பொதுமக்களும் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் அருள்பாண்டி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், ராஜேந்திரன், விஜயன், தர்மராஜ், ராஜன், முத்துகுட்டி, ராஜேஸ்குமார், ஜெயராஜ், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story